400 குழந்தைகளின் முகத்தில் மகிழ்ச்சியை மலரச் செய்த மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை : நாட்டுப்புற நடனங்கள், பறை இசையுடன் கோலாகலம்
400 குழந்தைகளின் முகத்தில் மகிழ்ச்சியை மலரச் செய்த மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை : நாட்டுப்புற நடனங்கள், பறை இசையுடன் கோலாகலம்
2018-ஆம் ஆண்டு சமூகத்தின் விளிம்புநிலையில் வாழும் மக்களுக்கு உதவும் உயரிய நோக்கத்துடன் தொடங்கப்பட்ட மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை, கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு சமூக நலப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. சாலையோரங்களில் ஆதரவின்றி வாழும் முதியவர்கள், கைவிடப்பட்டவர்கள், பிச்சையெடுக்கும் நிலையில் உள்ளவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் எனப் பலரையும் மீட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு, மருத்துவ உதவி, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்கி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் சிறப்பு விழாவை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, 8-ஆம் ஆண்டு "மகிழ் தீப ஒளி – 2026" தீபாவளி சிறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 14 ஆதரவற்றோர் இல்லங்களிலிருந்து மொத்தம் 400 பயனாளிகள் பங்கேற்றனர்.
அவர்களில் 260 பேர் சிறப்புக் குழந்தைகள் (Special Children), 140 பேர் பிற குழந்தைகள் ஆவர். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக பரதநாட்டியம், சிலம்பம், கரகாட்டம், மாயாஜால நிகழ்ச்சி, நாட்டுப்புற நடனங்கள், பறை இசை உள்ளிட்ட பல்வேறு கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. விழாவில் பங்கேற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் புத்தாடைகள், தீபாவளி இனிப்புகள், உணவு மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. குழந்தைகளுடன் இணைந்து அவர்களைப் பராமரிக்கும் இல்ல நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களும் விழாவில் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்த 10 நிரந்தரத் தன்னார்வலர்களும், 25 கல்லூரி மாணவர் தன்னார்வலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றினர். நன்கொடையாளர்கள், சமூக ஆர்வலர்கள், சிறப்பு விருந்தினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட சுமார் 600 பேர் இவ்விழாவில் கலந்துகொண்டனர். விழாவின் இறுதியில் நடைபெற்ற பறை இசை நிகழ்ச்சி அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. குழந்தைகள், இல்லப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து நடனமாடி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். குழந்தைகளின் முகத்தில் மலர்ந்த புன்னகையும் உற்சாகமும் விழாவின் சிறப்பம்சமாக அமைந்தது. "ஒவ்வொரு குழந்தைக்கும் மகிழ்ச்சியாக வாழும் உரிமை உண்டு. அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்குவதே எங்களின் நோக்கம்" என்ற உயரிய எண்ணத்துடன் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தனியொரு முயற்சியாகத் தொடங்கிய இந்தச் சமூகப் பயணம், இன்று பல நல்ல உள்ளங்களின் ஆதரவோடும் தன்னார்வலர்களின் அர்ப்பணிப்போடும் 8 ஆண்டுகளைக் கடந்து பயணித்து வருகிறது. இந்தப் பயணத்தில் உறுதுணையாக இருந்த நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள், ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அறக்கட்டளை தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டது. ஒரு நாள் விழாவாக மட்டுமல்லாமல், 400 குழந்தைகளின் வாழ்க்கையில் மறக்க முடியாத மகிழ்ச்சியான நினைவுகளை உருவாக்கிய நிகழ்வாக "மகிழ் தீப ஒளி – 2026" அமைந்தது. மாறுவோம்... மாற்றுவோம்... மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வோம்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0