கேபிள் டிவி சேவைக்கான ஜிஎஸ்டி வரியை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் : தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மாநில பொதுக்குழு மாநாட்டில் தீர்மானம்
கேபிள் டிவி சேவைக்கான ஜிஎஸ்டி வரியை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் : தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மாநில பொதுக்குழு மாநாட்டில் தீர்மானம்
தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் 23-வது மாநில பொதுக்குழு மாநாடு திருச்சியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாநில தலைவர் சுப.வெள்ளைச்சாமி தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர் பி.விஷ்ணுவர்த்தன் வரவேற்புரையாற்றினார். மாநில துணைச் செயலாளர் எஸ்.குமரேசன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். தொடர்ந்து, வேலை மற்றும் அமைப்பு அறிக்கையை மாநில செயலாளர் எஸ்.ராதாகிருஷ்ணனும், வரவு-செலவு அறிக்கையை மாநில பொருளாளர் ஆர்.கோவர்த்தனும் வாசித்தனர்.
இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ் பேராசிரியர் முனைவர் சா.நீலகண்டன் மற்றும் மாநிலத் துணைத் தலைவர் பி.ஆர்.தணிகைவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 'தடைகளை உடைத்து வெள்ளி விழாவை நோக்கி' என்ற தலைப்பில் நிறுவனத் தலைவர் பி.சகிலன் எழுச்சியுரையாற்றினார். கௌரவத் தலைவர் ஏ.சலீம், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.அப்சர் ஆகியோரும் உரையாற்றினர். மாநாட்டில் ஒன்றிய அரசு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் கட்டண சேனல்களின் கட்டணத்தை குறைக்க வேண்டும். கேபிள் டிவி சேவைக்கான ஜிஎஸ்டி வரியை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்.
கேபிள் டிவி வணிகத்திற்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும். நலவாரிய தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அரசு கேபிள் டிவி செயல்பாடுகளை சீரமைத்தல் மற்றும் ஒன்றிய அரசின் முறையான அனுமதியுடன் இயக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை கே.பிரகதீஸ்வரன் முன்மொழிய ஜி.சேகர் வழிமொழிந்தார். மாநாட்டில் மாநில தலைவராக சுப. வெள்ளைச்சாமி, மாநில செயலாளராக எஸ். ராதாகிருஷ்ணன், மாநில பொருளாளராக பி விஷ்ணுவர்த்தன் மற்றும் 193 மாநில செயற்குழு உறுப்பினர்களும், 25 பேர் கொண்ட மாநில உயர்மட்ட குழுவும் தேர்வு செய்யப்பட்டது. மேலும் டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற உள்ள வெள்ளிவிழா மாநாட்டு வரவேற்பு குழு தலைவராக பி. சகிலன், கௌரவ தலைவர்களாக . பி வி.கல்யாண சுந்தரம், ஜாக் ஜெயராமன் மற்றும் துணை நிர்வாகிகள், மாநிலத் தலைவர்கள், மாநில செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இம்மாநாட்டில் மாநில துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிறைவாக திருச்சி மாவட்டத் தலைவர் ஜி.வெங்கடேஷ் நன்றியுரையாற்றினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0