5 மணிநேரம் தொடர்ச்சியாக பரதநாட்டியம் ஆடி சோழன் உலக சாதனை படைத்த கிளிநொச்சி மாணவி றெஜெஸ்ரிகா

Sep 26, 2026 - 20:09
5 மணிநேரம் தொடர்ச்சியாக பரதநாட்டியம் ஆடி சோழன் உலக சாதனை படைத்த கிளிநொச்சி மாணவி றெஜெஸ்ரிகா

5 மணிநேரம் தொடர்ச்சியாக பரதநாட்டியம் ஆடி சோழன் உலக சாதனை படைத்த கிளிநொச்சி மாணவி றெஜெஸ்ரிகா

தொடர்ச்சியாக 5 மணிநேரம் பரதநாட்டியம் ஆடி, கிளிநொச்சியைச் சேர்ந்த 9 வயது மாணவி செல்வி றெஜெஸ்ரிகா சோழன் உலக சாதனையைப் படைத்து புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளார். கிளிநொச்சியில் வசித்து வரும் மரியோ ப்ராங்ளின் ரெஜிஸ் மற்றும் உதயராணி தம்பதியரின் மகளான செல்வி றெஜெஸ்ரிகா, கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகிறார். சிறு வயது முதலே நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர், பிரஷாந்தினி நடனப் பள்ளியில் ஆர்வத்துடன் பரதநாட்டியம் பயின்று வருகிறார்.

 மாணவி றெஜெஸ்ரிகாவின் நடனத் திறமையை அடையாளம் கண்ட அவரது பயிற்சி ஆசிரியர், அவரிடம் உலக சாதனை படைக்கும் அளவிற்கான திறமை இருப்பதை உணர்ந்து, அவரை தொடர்ந்து ஊக்கப்படுத்தி பயிற்சி அளித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, வரலாற்றுச் சிறப்புமிக்க சோழன் உலக சாதனை நிகழ்வு கிளிநொச்சி நகரில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், 5 மணிநேரம் தொடர்ச்சியாக நடனமாட வேண்டும் என்ற நடுவர்களின் அறிவுறுத்தலை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்ட மாணவி றெஜெஸ்ரிகா, தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி தொடர்ந்து 5 மணிநேரம் பரதநாட்டியம் ஆடி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக நிறைவேற்றினார். தனது விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் நீண்டகால தீவிரப் பயிற்சியின் மூலம் 9 வயதிலேயே இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தச் சாதனை நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்ரமணியம் ஆகியோர் கலந்துகொண்டு, சாதனை மாணவி றெஜெஸ்ரிகாவை வாழ்த்திப் பாராட்டினர். சோழன் உலக சாதனையைப் படைத்த மாணவி றெஜெஸ்ரிகாவுக்கு, சோழன் உலக சாதனை அமைப்பின் சார்பில் சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், நினைவுக் கேடயம் மற்றும் சாதனைப் பதிவுக் கோப்பு உள்ளிட்ட சிறப்பு அங்கீகாரங்கள் வழங்கப்பட்டன. 9 வயதிலேயே தனது கலைத் திறமையை உலக சாதனையாக மாற்றியுள்ள மாணவி றெஜெஸ்ரிகாவின் இந்தச் சாதனை, இளம் தலைமுறையினருக்கு விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் தொடர் பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0