அகில பாரத ஐயப்ப சேவா சங்க திருச்சி மாவட்ட யூனியன் செயற்குழு கூட்டம் : சபரிமலை விழாக்கால அன்னதானம், சேவைகள் குறித்து ஆலோசனை
அகில பாரத ஐயப்ப சேவா சங்க திருச்சி மாவட்ட யூனியன் செயற்குழு கூட்டம் : சபரிமலை விழாக்கால அன்னதானம், சேவைகள் குறித்து ஆலோசனை
அகில பாரத ஐயப்ப சேவா சங்க திருச்சி மாவட்ட யூனியனின் செயற்குழுக் கூட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் அமைந்துள்ள யோகா திருமண மண்டபத்தில், மாவட்டத் தலைவர் ரமேஷ் சாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சபரிமலை விழாக்காலத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய சேவைகள் மற்றும் மாவட்ட அமைப்பின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. சபரிமலை விழாக்காலத்தை முன்னிட்டு திருச்சி, ஸ்ரீரங்கம் மற்றும் சமயபுரம் ஆகிய பகுதிகளில் அன்னதான முகாம்கள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
சபரிமலையில் சங்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் சேவைகள் மற்றும் அன்னதானப் பணிகளுக்குத் தேவையான தொண்டர்களை அனுப்புவது, அன்னதானப் பொருட்களை அனுப்புவது குறித்து விவாதிக்கப்பட்டது. விழாக்காலத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைச் சங்கங்களுக்கும் மாவட்ட நிர்வாகிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சேவைகள் மற்றும் பணிகளை ஆய்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. புதிதாகத் தொடங்கப்பட்ட இரண்டு கிளைகளுக்கும், செயல்படாமல் இருந்த பழைய கிளைகளைப் புதுப்பித்ததன் அடிப்படையிலும் பதிவு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வருகிற 25.10.2026 அன்று ஸ்ரீரங்கம் அன்னதான முகாம் அமைப்பதற்கான பந்தக்கால் நடும் வைபவம் நடைபெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. வருகிற 17.11.2026 கார்த்திகை முதல் நாளன்று ஸ்ரீரங்கம் முகாமைத் தொடங்குவது மற்றும் தொடக்க விழாவிற்குச் சிறப்பு விருந்தினர்களை அழைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தின் தொடக்கத்தில் மகளிர் அணி நிர்வாகி திருமதி ஜெயா இறைவணக்கம் செலுத்தினார். மாவட்டத் துணைத் தலைவர் முத்து வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து மாவட்டத் தலைவர் ரமேஷ் சாமி தலைமையுரை நிகழ்த்தினார். அதன்பின், அலுவலகச் செயலாளர் அம்சராம் கடந்த கூட்டத்தின் அறிக்கையை வாசித்தார். மாவட்ட இணைச் செயலாளர் தர்மலிங்கம் அவர்கள் கடந்த கூட்டத்திற்குப்பின் நடைபெற்ற மாவட்டச் செயல்பாடுகள் குறித்தும், இணைச் செயலாளர் சிதம்பரம் கிளைச் சங்கங்களின் செயல்பாடுகள் குறித்தும் அறிக்கைகளை வாசித்தனர். அவை கூட்டத்தில் ஒப்புதல் பெற்றன. தொடர்ந்து, மாவட்டக் கௌரவ தலைவர் குருசாமி சபரிதாசன் மற்றும் மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பங்கேற்ற கிளைச் சங்க நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் பதிவு செய்தனர். மாவட்டப் பொருளாளர் சுரேஷ் கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினார். இறுதியாக, மாவட்டத் தொண்டர் படை கண்காணிப்பாளர் புஷ்பராஜ் நன்றியுரை ஆற்றினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0