கனிமொழி தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் : திருச்சி மாவட்ட அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன் தலைமையில் மனு
கனிமொழி தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் : திருச்சி மாவட்ட அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன் தலைமையில் மனு
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அறிக்கை தயாரிக்கும் பணிக்கு தி.மு.க. சார்பில் கருத்து கேட்பு கூட்டம் மண்டலம் வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. தி.மு.க. துணை பொது செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் திருச்சியில் ஜமால் மு கமது கல்லூரியில் நடை பெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.யிடம் திருச்சி மாவட்ட அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன் தலைமையில் மனு கொடுத்தனர். அதில், பஞ்சப்பூர் புதிய மார்க்கெட் வரைபடம் வெளியிடப்பட வேண்டும். நவம்பர் 14-ந் தேதி கலெக்டர் சரவணன் எங்களிடம் எழுத்துப்பூர்வமாக கடைகளும், அதன் அளவுகளும் கேட்டதன் அடிப்படையில், நாங்கள் தெளிவான விளக்க அறிக்கை கொடுத்தும் இது வரை எங்களை அழைத்து கலந்து ஆலோசிக்கவில்லை. தரைத்தளம் மட்டுமே கட்ட வேண்டும். ( மாடி வைத்துக் கட்டக்கூடாது ) வியாபாரிகள், விவசாயிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், பொதுமக்கள் மாடியில் ஏறி இறங்க முடியாது. பஞ்சப்பூர் அல்லது வேறு எங்கு புதிய காய்கறி மார்க்கெட் திருச்சியில் கட்டினாலும் முழுமையாக கட்டி முடிக்காமல் திறப்பு விழா நடத்தக் கூடாது. திருச்சி காந்தி மார்க்கெட் எக்காரணம் கொண்டும் இடமாற்றம் செய்யப்படாது என்றும், ரூ.50 கோடியில் புணரமைக்கப்பட்டு, தொடர்ந்து காந்தி மார்க்கெட் இருக்கும் இடத்திலேயே செயல்படும் என்றும், சட்ட மன்றக் கூட்டத்தொடரிலேயே அமைச்சர் கே.என். நேருவும், திருச்சி காந்தி மார்கெட் அருகில் உள்ள சிறைச்சாலையை அகற்றி விட்டு, காந்தி மார்க்கெட்டை விரிவாக்கம் செய்ய பரிசீலிக்கப்படும் என்று சட்ட மன்ற கூட்டத்தொடரில் அமைச்சர் ரகுபதியும் வாக்குறுதி அளித்துள்ளார்கள். இச்சூழலில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஞ்சப்பூர் மார்க்கெட் வெளி ஆட்களுக்கு டெண்டர் விடுவதாக அறிகிறோம். புதிதாக கட்டப்பட்டு வரும் கடைகளை திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு மட்டுமே கடைகள் தர வேண்டும். எக்காரணம் கொண்டும் வெளி ஆட்களுக்கோ, வெளியூர் வியாபாரிகளுக்கோ, கட்சிக்காரர்களுக்கோ கடைகள் ஒதுக்கக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம். திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள எந்த ஒரு வியாபாரிகளுக்கும் புதிய மார்க்கெட் கடைகள் விடுபட்டு விடக்கூடாது.
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு மட்டுமே புதிய மார்க்கெட்டில் கடைகள் தர வேண்டும். புதிய மார்க்கெட் முழு செயல்பாட்டிற்கு வரும் வரை திருச்சி காந்தி மார்க்கெட்டிற்கு வரும் எந்த ஒரு காய்கனி வாகனங்களையும் மாநகருக்குள் நுழைய தடை விதிக்கக் கூடாது. (சென்னை) கோயம்பேடு மார்க்கெட் போலவே அரசு நிர்ணயிக்கும் தொகைக்கு எங்களுக்கு பதிய கடைகளை சொந்தமாக வழங்க வேண்டும். மேற்கண்ட அனைத்து கோரிக்கைகளையும் எங்களுக்கு முழுமையாக செயல் படுத்தி சுமார் 10,000 குடும்பங்களை வாழ வைப்பீர்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0