வரலாற்றில் ஒரு பயணம் கண்காட்சி

Sep 8, 2026 - 12:23
Sep 8, 2026 - 12:24
வரலாற்றில் ஒரு பயணம் கண்காட்சி

வரலாற்றில் ஒரு பயணம் கண்காட்சி

புதுக்கோட்டை, ஆவுடையார் கோவில், பாண்டி பத்திரம், ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் நிர்வாகத்தில் உள்ள மாணிக்கவாசகர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வரலாற்றில் ஒரு பயணம் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் அண்ணாதுரை தலைமை வகித்தார். மேனாள் ஆசிரியர் இளம்வழுதி ஒருங்கிணைப்பில், திருச்சி மாவட்ட வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சங்ககால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், புதை படிமங்கள் சேகரிப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் குழுவாக நாணயங்கள், பணத்தாள்கள், பழங்காலப் பொருட்களை காட்சிப்படுத்தி பேசுகையில், நம் முன்னோர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, பொருளாதாரம், தொழில்நுட்பம், கலைநயம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இக்கண்காட்சி ஒரு வரலாற்றுப் பாடமாகத் திகழ்கிறது. காலம் மாறுகிறது.

 வாழ்க்கை முறைகள் மாறுகின்றன. நாம் பயன்படுத்திய பொருட்கள், பரிமாற்ற முறைகள், பணம், தொழில்நுட்பம் என அனைத்தும் காலத்தின் ஓட்டத்தில் பல்வேறு மாற்றங்களை கண்டுள்ளன. அந்த மாற்றங்களை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது “வரலாற்றில் ஒரு பயணம்” கண்காட்சி. ஒரு சிறிய நாணயத்திற்குள் ஒரு காலத்தின் வரலாறே அடங்கியிருக்கிறது. அரசர்களின் உருவங்கள், சின்னங்கள், எழுத்துக்கள், ஆண்டு குறிப்புகள், உலோகப் பயன்பாடு ஆகியவற்றின் மூலம் அக்காலத்தின் ஆட்சி, பொருளாதாரம், கலை, பண்பாடு போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும். பழங்கால நாணயங்களிலிருந்து நவீன கால நாணயங்கள் வரை இடம்பெறும் தொகுப்பு, பண்டமாற்று முறையிலிருந்து நவீன பணப் பரிவர்த்தனை வரை ஏற்பட்ட வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது. பணத்தாள்களின் பரிணாமமானது ஒரு நாட்டின் வரலாற்றையும் பண்பாட்டையும் பதிவு செய்யும் முக்கிய ஆவணங்களாகும். பழைய காலப் பணத்தாள்களில் காணப்படும் அரசர்கள், தலைவர்கள், வரலாற்றுச் சின்னங்கள், இயற்கைக் காட்சிகள், பண்பாட்டு அடையாளங்கள் ஆகியவை அந்தந்த காலகட்டத்தின் நினைவுகளைப் பாதுகாத்து வருகின்றன என்றார். ஒரு காலத்தில் நம் கைகளில் புழங்கிய பணத்தாள்களை இன்று அருங்காட்சியகத்தில் பார்க்கும்போது, அது பலருக்கும் தங்கள் கடந்த கால நினைவுகளை மீட்டெடுக்கும் அனுபவமாக அமைகிறது. வீட்டில் பயன்படுத்தப்பட்ட பழைய பொருட்கள், வேளாண் கருவிகள், தொழிற்கருவிகள், விளக்குகள், அளவைக் கருவிகள், மரப்பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், உலோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பழங்காலப் பொருட்கள் நம் முன்னோர்களின் அன்றாட வாழ்க்கையைப் பேசுகின்றன என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0