நியாய விலைக்கடை பணியாளர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 12-ந் தேதி சென்னையில் போராட்டம் : திருச்சியில் நடந்த கூட்டத்தில் அறிவிப்பு
நியாய விலைக்கடை பணியாளர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 12-ந் தேதி சென்னையில் போராட்டம் :
திருச்சியில் நடந்த கூட்டத்தில் அறிவிப்பு தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் திருச்சியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. திருவரங்கம் செல்வமணி வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். மாநிலத் தலைவர் ஜெயச்சந்திர ராஜா சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நிர்வாகிகள் திருச்சி எடத்தெரு பாபு, அண்ணாதுரை, தஞ்சை ராமலிங்கம் நடராஜன், செல்லத்துரை, மாரிமுத்து, பிச்சை பிள்ளை, சேகர், பாஸ்கர், ரமேஷ், தினேஷ் உள்பட மாநில முழுவதும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் பொன்னர் நன்றி கூறினார். இதில் பொது விநியோகத் திட்டத்திற்கான தனித்துறையை உருவாக்க வேண்டும், ரேஷன் பொருட்களை பொட்டலமாக வழங்கவேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 12-ந் தேதி சென்னையில் ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்களை அழைத்து மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின் மாநில தலைவர் ஜெயச்சந்திரன் ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- கல்வித் தகுதிக்கு ஏற்ப பணியிடம் மற்றும் ஊதியம் வழங்கிட வேண்டும், மேலும் ஐஏஎஸ் தலைமையில் ஊதிய மாற்றக்குழு அமைத்து நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு சலுகைகள் வழங்கிட வேண்டும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இடைத்தராசும் நியாய விலை கடைகளில் உள்ள விற்பனை முனையமும் இணைத்து சரியான எடையில் அத்தியாவசிய பொருட்கள் பொட்டலமாக வழங்கப்பட வேண்டும், ரேஷன் கடைகளில் எடையாளர் நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் இந்த போராட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மாற்றம் என அரசு அறிவித்து விட்டு தற்போது வரை அதனை நடைமுறை படுத்தவில்லை, அதற்கான கமிட்டி அமைத்து ஜனவரி மாதத்திற்குள் ஊதிய உயர்வை அறிவிக்க வேண்டும், நுகர்பொருள் வாணிப கழகம் பொருள் வழங்கப்படுவதும், கூட்டுறவுதுறை சார்பில் கடை நடத்துவதும், பொருள் ஒதுக்கீடு செய்வது தமிழ்நாடு வழங்கல் துறை என மூன்று துறைகளின் கீழ் செயல்படும் நியாய விலைக்கடை துறையை தனித்துறையாக அறிவித்து மானியம் மற்றும் விளிம்பு தொகையினை கருவூலம் மூலம் வழங்கிட வேண்டும், தாயுமானவர் திட்டத்தில் எடையாளர் மற்றும் லோடுமேன்கள் நியமிக்கப்படவில்லை. லாரி வாடகையை விற்பனையாளரை கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அரசு தள்ளிவிட்டது . எனவே இந்த திட்டத்தில் உள்ள குறைபாடுகளை அரசு நிவர்த்தி செய்ய வேண்டும். வயதானவர்களுக்கு கைரேகை பதிவு செய்து பொருட்கள் வழங்குவதில் சிரமம் உள்ளதால் ஓடிபி முறையை அமல்படுத்தி பொருட்கள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் . சென்னையில் நடைபெறும் போராட்ட தினத்தின் போது முதல்வரை சந்திக்க உள்ளோம். அதே நேரம் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் மாநில செயற்குழு கூடி அடுத்த கட்ட போராட்டங்கள் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0