திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காசுகளில் கணபதி கண்காட்சி
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காசுகளில் கணபதி கண்காட்சி
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காசுகளில் கணபதி சிறப்பு கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவன தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார். சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், வரலாற்று ஆர்வலர் அரிஸ்டோ வசந்தகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன் காசுகளில் கணபதி நாணயங்களை காட்சிப்படுத்தி பேசுகையில், இந்தியாவில் விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் எனப்படுகிறது. இவர் கணங்களின் அதிபதி என்பதால் கணபதி என்றும் யானையின் முகத்தினை கொண்டுள்ளதால் யானைமுகன் என்றும் அழைக்கப்பெறுகிறார். இந்துக்களின் புராணங்களில் விநாயகர் மற்றைய இந்துக்கடவுள்களான சிவன், பார்வதி ஆகியோரின் பிள்ளையாகவும் முருகன் எனும் கடவுளின் அண்ணனாகவும் கூறப்படுகிறார். இக்கடவுளின் வாகனம் மூஞ்சூறு . ’கணேச புராணம்’, கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய நான்கு யுகங்களிலும் நான்கு அவதாரங்களாக அவதரிப்பதாகக் கூறுப்படுகிறது. இக்கணபதி காசு சங்க காலத்திற்கும் நவீன காலத்திற்கும் இடைப்பட்ட காலங்களில் வெளியிடப்பட்டுள்ளன. பழங்காலத்தில் தமிழர், நாணயச் செலாவணி முறையை அறிந்திருந்ததோடு தாமே நாணயங்களை உருவாக்கிப் புழக்கத்தில் விட்டனர். சங்க காலம் முதல் சோழர், பாண்டியர் காலங்கள் வரையிலுமான பழங்கால நாணயங்களில் உலோகங்களைப் பயன்படுத்தியுள்ளனர். மேலும், நாணயங்கள் கிடைக்கின்ற இடத்தை வைத்து உரிய மன்னரின் நாட்டு எல்லை, வணிகத் தொடர்பு முதலியவற்றைக் கணிக்கலாம். சில நாணயங்கள் வணிகர்கள், பொற்கொல்லரின் அமைப்புகளால் ஆட்சியாளர்களின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டன. வாணிகமும் கைவினைத் தொழிலும் பெற்றிருந்த முதன்மைத்துவம் இதனால் வெளிப்படுகிறது. நாணயங்களில் அரசன், தெய்வங்களின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. சமயச் சின்னங்களும் அவற்றில் இடம்பெறுகின்றன. இவை அக்காலத்தின் கலைகளையும் சமயங்களையும் அறிந்துகொள்ள உதவுகின்றன. தமிழகத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் அனைவருமே தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தும் யானை, புலி, மீன், குதிரை, காளை, சிங்கம் போன்ற விலங்குகள், பறவைகள், மற்றும் சமயம் சார்ந்த உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்டுள்ளனர். கி.மு.முதலாம் நூற்றாண்டு வரையிலும் ரோமானிய செம்பு காசுகள் கிடைத்துள்ளது. முகலாய மன்னர் அக்பர் ராமர், சீதை உருவம் பொறித்த நாணயங்களும், ஹைதர் அலி, திப்புசுல்தான் ஆட்சியில், சிவன்- பார்வதி உருவம் பொறித்த நாணயங்களும் வெளிவந்துள்ளன.
ஆற்காடு நவாப் ஆட்சியில், அதிக அளவில் சைவ, வைணவ கடவுள்களான சிவன், விஷ்ணு, கணபதி, முருகன், அனுமன் நாணயங்களை வெளியிடப்பட்டுள்ளன. சிவன் கோவில் நினைவாக சில காசுகளை வெளியிட்டுள்ளார். 1.2 கிராம் எடைகொண்ட செம்பு காசின் முன் பக்கத்தில் கணபதி அமர்ந்த நிலையிலும், பின்பக்கத்தில் வட்டத்திற்குள் செங்குத்தாக அங்குசம் உள்ளது. மதுரை நாயக்கர் காலத்தில் வெளியிடப்பட்ட காசுகளில் கணபதி முன் பக்கத்தில் அமர்ந்த நிலையிலும் பின்பக்கத்தில் ஸ்ரீ மங்கம்மா, ஸ்ரீரங்க, ஸ்ரீ வீர என தெலுங்கு எழுத்துக்கள் பெயர் பல்வேறு காசுகளில் பொறிக்கப்பட்டுள்ளது எனவும், தமிழகத்தின் பழம்பெறும் வழிபாடுகளில் கணபதி வழிபாடும் சிறப்பாக இருந்ததை காட்சிப்படுத்தி வரலாற்று தரவுகள் மூலம் எடுத்துரைத்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0