திருச்சியில் கடும் குளிரில் தவித்த 100 பேருக்கு போர்வை வழங்கிய பள்ளி மாணவர்கள் : புத்தாண்டு நள்ளிரவில் நெகிழ்ச்சி

Jan 2, 2026 - 09:39
திருச்சியில் கடும் குளிரில் தவித்த 100 பேருக்கு போர்வை வழங்கிய பள்ளி மாணவர்கள் : புத்தாண்டு நள்ளிரவில் நெகிழ்ச்சி

திருச்சியில் கடும் குளிரில் தவித்த 100 பேருக்கு போர்வை வழங்கிய பள்ளி மாணவர்கள் : புத்தாண்டு நள்ளிரவில் நெகிழ்ச்சி

திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த மோகன் -பிரபாவதி தம்பதியினரின் மகள் சுகித்தா. செயின்ட் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வரும் இவர், சிலம்பத்தில் கின்னஸ் சாதனை படைத்ததுடன், தற்போது துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தமிழக அணிக்கும் தேர்வாகியுள்ளார். மாணவி சுகித்தா, கடந்த 7 ஆண்டுகளாகத் தனது சேமிப்புப் பணம் மற்றும் பெற்றோரின் உதவியுடன் ஏழை எளியவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். இவரது சேவையை செய்தித்தாள்கள் வாயிலாகக் கண்டு ஈர்க்கப்பட்ட வேலம்மாள் பள்ளி 7-ம் வகுப்பு மாணவர் ஸ்ரீஷ்ராம், இந்த ஆண்டு சுகித்தாவுடன் இணைந்து சேவையில் களமிறங்கினார்.

புத்தாண்டு பிறப்பை மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில், இருவரும் நள்ளிரவு நேரத்தில் திருச்சி மேம்பாலம், அரிஸ்டோ ஜங்ஷன் ரெயில் நிலையம், மத்திய பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் காவிரி பாலம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனியில் போர்வை இன்றி சுருண்டு படுத்துக் கிடந்த முதியவர்கள் மற்றும் ஆதரவற்றோர் என சுமார் 100 பேருக்கு தேடிச் சென்று போர்வைகளை வழங்கினர். 

இது குறித்து மாணவர்கள் கூறுகையில், "முகம் தெரியாதவர்களுக்கு உதவும்போது கிடைக்கும் மகிழ்ச்சி மிகப்பெரியது. மார்கழி குளிரால் அவதிப்படுபவர்க ளுக்கு எங்களால் முடிந்த சிறு உதவியைச் செய்து உள்ளோம். இது எங்களுக்கு மிகுந்த மன நிறைவைத் தருகிறது" என்றனர். சிறு வயதிலேயே சமூக அக்கறையுடன் செயல்பட்டு வரும் இந்த பள்ளி மாணவர்களின் செயலை திருச்சி மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0