​சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு : 18 ஆண்டுகால நினைவுகளைப் புதுப்பித்த சங்கமம்

Jul 27, 2026 - 16:29
Jul 27, 2026 - 16:29
​சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு : 18 ஆண்டுகால நினைவுகளைப் புதுப்பித்த சங்கமம்

சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு : 18 ஆண்டுகால நினைவுகளைப் புதுப்பித்த சங்கமம்

காலங்கள் உருண்டோடினாலும், பள்ளிப் பருவத்தின் பசுமை நினைவுகளும், மாசற்ற நட்பும் என்றும் அழிவதில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில், திருச்சி சமயபுரம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் மேல்நிலைப் பள்ளியின் 2006–2008-ஆம் கல்வியாண்டு முன்னாள் மாணவர்களின் பிரம்மாண்ட சந்திப்பு விழா பள்ளி வளாகத்தில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது. சுமார் 18 ஆண்டுகள் கடந்து நடைபெற்ற இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு, பழைய நினைவுகளை உயிர்ப்பிக்கும் திருவிழாவாக அமைந்தது. ​காலை 10:00 மணிக்குத் தொடங்கிய இந்நிகழ்வில், சாமி பூஜையைத் தொடர்ந்து குழுப் புகைப்படம் எடுக்கப்பட்டது.

பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா முறைப்படி தொடங்கியது. கல்வி புகட்டி மறைந்த ஆசிரியர்களுக்கும், நம்மை விட்டுப் பிரிந்த உடன் பயின்ற நண்பர்களுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக ஒரு நிமிடம் அமைதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பள்ளியின் தற்போதைய மாணவச் செல்வங்கள் வழங்கிய கண்கவர் வரவேற்பு நடனம் அனைவரையும் கவர்ந்தது. ​​நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து, மதிப்பிற்குரிய ஆசிரியப் பெருமக்கள் ராமதாஸ், ராமமூர்த்தி, எட்வின், குணசேகரன், கெளரி, அன்னலெட்சுமி, செல்வம் மற்றும் முருகன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவினை முறைப்படி தொடங்கி வைத்தனர். ​தங்கள் வாழ்வைச் செதுக்கிய குருநாதர்களைக் கௌரவிக்கும் விதமாக, வருகை தந்திருந்த தலைமை ஆசிரியர் ராமதாஸ் ஐயா உட்பட 39 ஆசிரியப் பெருமக்களுக்கு முன்னாள் மாணவர்கள் சார்பாகப் பொன்னாடை (சால்வை) அணிவித்து, நினைவுப் பரிசுகள் வழங்கி குரு கௌரவம் செய்யப்பட்டது. ஆசிரியர்களும் தங்கள் உரையில் மாணவர்களின் இந்த அன்பைக் கண்டு மனமுருகி வாழ்த்துகளை வழங்கித் தலைமை உரையாற்றினர். ​தாங்கள் கற்ற பள்ளிக்கு நன்றி செலுத்தும் விதமாக, 2006–2008 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, பள்ளியின் நவீனக் கல்வி வளர்ச்சிக்காகச் சிறப்பான ப்ரொஜெக்டர் (Projector) சாதனத்தைப் பள்ளி நிர்வாகத்திடம் நலத்திட்ட உதவியாக வழங்கினர். ​இந்த விழாவில் 2006–2008 கல்வியாண்டில் பயின்ற 100-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு விழாவைப் சிறப்பித்தனர். அவர்கள் தங்களின் பள்ளிக் காலச் சுவாரஸ்யமான அனுபவங்களையும் குறும்புகளையும் மேடையில் பகிர்ந்து கொண்டு பழைய நினைவுகளில் மூழ்கினர். கலந்துகொண்ட அனைத்து முன்னாள் மாணவ, மாணவிகளுக்கும் அமைப்பாளர்கள் சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. ​​நிகழ்ச்சியின் நிறைவாக முன்னாள் மாணவர் நன்றியுரையாற்றினார். தேசியக்கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது. தொடர்ந்து ஆசிரியர்களுக்கும், முன்னாள் மாணவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் அறுசுவை மதிய உணவு உபசரிப்பு வழங்கப்பட்டது.​18ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரே வகுப்பறையில் அமர்ந்து சிரித்துப் பேசி, பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட நண்பர்கள், விழா முடிவில் "மீண்டும் சந்திப்போம்" என்ற வாக்குறுதியோடு, பிரிந்து செல்ல மனமில்லாமல் கனத்த இதயத்தோடும், அளப்பரிய மகிழ்ச்சியோடும் விடைபெற்றுச் சென்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0