திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் தமிழக அகழாய்வுகள் குறித்த மாணவர் ஆய்வுக் கருத்தரங்கம்
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் தமிழக அகழாய்வுகள் குறித்த மாணவர் ஆய்வுக் கருத்தரங்கம்
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறை சார்பில் தமிழக அகழாய்வுகள் உணர்த்தும் தமிழின் தொன்மை என்கிற மையப்பொருளில் மாணவர் ஆய்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது. தொடக்க விழாவில் கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி மரியதாஸ், சே.ச. அவர்கள் தலைமையேற்று சிறப்பித்தார். தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஆ.ஜோசப் சகாயராஜ், கருத்தரங்கச் செயலர் முனைவர் சி.ஷகிலா பானு, பணிமுறை இரண்டின் ஒருங்கிணைப்பாளமுனைவர் சி. பாக்கிய செல்வரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முனைவர் பட்ட ஆய்வாளர் பா.எழில்செல்வன் வரவேற்புரையாற்றினார். முதல்வர் தலைமையுரையில், காலச்சூழலுக்கு தலைப்பைத் தெரிவு செய்து மாணவர் ஆய்வுக் கருத்தரங்கு நடத்தும் தமிழாய்வுத்துறையையும், பிற கல்லூரிகளிலிருந்து வருகை தந்துள்ள ஆய்வாளர்களைப் பாராட்டுவதாகவும் தெரிவித்தார். தமிழரின் தொன்மை குறித்து ஆய்வது நமக்குத் தேடல் மனப்பான்மையை அதிகரிப்பதாக அமைகிறது. அத்தகைய தேடலை விதைக்கிற நாளாகவும், தமிழின்மீது பிடிப்பு ஏற்படுத்தும் நாளாகவும் இந்நாள் அமைய வேண்டும் என வாழ்த்தி நிறைவு செய்தார். தொடர்ந்து தமிழாய்வுத்துறைத் தலைவர் வாழ்த்துரையை கவிதை வடிவில் தந்து சிறப்பித்தார். சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவுநரும், ஆசிரியர் பயிற்றுநருமாகிய புலவர் கா.காளிராசா அகழாய்வு உணர்த்தும் தமிழின் தொன்மை என்கிற பொருண்மையில் சிறப்புரை நிகழ்த்தினார். தமிழி எழுத்து, வட்டெழுத்து குறித்து காட்சி வடிவில் எழுத்துக்களை மாணவர்களுக்கு அடையாளம்காட்டி தம் உரையைத் தொடங்கினார். எழுத்துக்களின் பரவலாக்கம், அரசியல் பின்னணி, வட்டெழுத்துக்கள் திருத்தம் ஆகியன குறித்த வரலாற்றுப் பின்னணியை எடுத்துக்கூறி தொல்லியல் சார்ந்த கருத்துக்களுக்கு விளக்கமளித்தார். தொல்பொருள்கள், கீறல்கள் குறியீடுகள், தமிழி எழுத்துகள், பனையோடுகள், உறைகிணறுகள் உள்ளிட்ட படங்களை மாணவர்களுக்கு அடையாளம் காட்டியதோடு கீழடி அகழ்வாய்வுக் கண்டுபிடிப்புகளை எடுத்துக் கூறினார். தொடக்க விழாவிற்குப்பிறகு கருத்தரங்கில் மற்றும் முனைவர் ஆ.இராஜாத்தி ஆகியோர் தலைமையேற்று அமர்வுகளை வழிநடத்தினர்.
இந்த அமர்வுகளில் 38 ஆய்வு மாணவர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். கருத்தரங்க நிகழ்வை முனைவர் பட்ட ஆய்வாளர் அ.ஞா.உமா மகேஸ்வரி நெறியாள்கை செய்து வருகிறார். நிறைவில் முனைவர் பட்ட ஆய்வாளர் மா.யுவஸ்ரீ நன்றியுரையாற்றினார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாழர் முனைவர் சி.ஷகிலா பானு மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் இக்கருத்தரங்க ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். இருத்தரங்கில் மேனாள் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் பொன்.புஷ்பராஜ், தமிழாய்வுத்துறைப் பேராசிரியர்கள் முனைவர் பட்ட ஆய்வாளர்கள், இளநிலை மற்றும் முதுநிலை தமிழ் இலக்கிய மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0