தமிழ் மொழி வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் சமூக செயற்பாட்டாளர்
தமிழ் மொழி வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் சமூக செயற்பாட்டாளர்
மொழி வாழ்ந்தால் இனம் வாழும்; இலக்கியம் வாழ்ந்தால் பண்பாடு வாழும்" என்ற உயரிய சிந்தனையை வாழ்க்கை நோக்கமாகக் கொண்டு, தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் பண்பாடு மற்றும் சமூக சேவையை ஒருங்கிணைத்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருபவர் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர், ஆளுநர் விருது பெற்ற எழுத்தாளர், யோகா ஆசிரியர் பெ. விஜயகுமார் என்கிற வெற்றிச்செல்வன் ஆவார். 1995ஆம் ஆண்டு முதல் சமூகப் பணியையும், தமிழ்ப்பணியையும் இணைத்து செயல்பட்டு வரும் அவர், தமிழ்மொழி என்பது வெறும் தொடர்பு மொழி அல்ல; அது ஒரு இனத்தின் வரலாறு, பண்பாடு, அறிவியல், வாழ்வியல், நாகரிகம் ஆகியவற்றின் கருவூலம் என்ற எண்ணத்துடன் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். தமிழ்மொழி வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக தமிழ் நூல்களைச் சேகரித்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதையும் தனது முக்கியப் பொறுப்பாகக் கருதி செயல்பட்டு வருகிறார். இலக்கியம், இலக்கணம், வரலாறு, அறிவியல், தத்துவம், நாட்டுப்புறவியல், தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், அஞ்சல் தலை சேகரிப்பு, மரபுவழி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரிய நூல்களை சேகரித்து பாதுகாத்து வருவது அவரது சிறப்பான பணியாகும். நூல்கள் அலமாரிகளில் அடைக்கப்பட்டு கிடக்காமல், வாசகர்களின் கைகளுக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இலவச நூலக சேவையையும் தொடர்ந்து நடத்தி வருகிறார். மாணவர்கள், ஆய்வாளர்கள், போட்டித் தேர்வு எழுதுவோர், ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் நூல்கள் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்திருப்பது அவரது தமிழ்ப்பணியின் முக்கிய அம்சமாகும். தமிழ் வழிக் கல்விக்கு ஊக்கம் தாய்மொழி வழிக் கல்வியே மாணவர்களின் சிந்தனைத் திறனை வளர்க்கும் என்ற நம்பிக்கையுடன், தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மொழிப் பயிற்சி, வாசிப்பு பழக்கம், நூல் அறிமுகம், இலக்கிய விழிப்புணர்வு, வரலாற்று விழிப்புணர்வு போன்ற நிகழ்வுகள் மூலம் இளம் தலைமுறையினரிடம் தமிழின் பெருமையை எடுத்துரைத்து வருகிறார். தமிழில் வாசிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்காக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் நூல்களை அறிமுகப்படுத்துதல், தமிழ் இலக்கியங்களை வாசிக்க ஊக்குவித்தல், நூலக பயன்பாட்டை அதிகரித்தல் போன்ற பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். எழுத்தாளர்களை ஆவணப்படுத்தும் பணிகள் ஒரு சமூகத்தின் அறிவுச் செல்வம் அதன் எழுத்தாளர்களே என்ற உண்மையை உணர்ந்து, பல்வேறு தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வாளர்கள், இலக்கியவாதிகள், சமூகச் சிந்தனையாளர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள், சாதனைகள் மற்றும் தமிழ்ப்பணிகளை ஆவணப்படுத்தி வருகிறார். பலர் மறந்து போகும் நிலையில் உள்ள படைப்பாளிகளின் பணிகளைத் தொகுத்து எதிர்கால தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தமிழ் இலக்கிய வரலாற்றிற்கான முக்கியமான ஆவணங்களை உருவாக்கி வருகிறார். வாசிப்பு பண்பாட்டை வளர்த்து, தமிழர் பண்பாட்டு மரபை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் அவரது தொண்டு, தமிழ்மொழி வளர்ச்சிக்கான நிலையான ஆவணப் பணியாகவும், எதிர்கால ஆய்வாளர்களுக்கான அரிய வழிகாட்டியாகவும் விளங்குகிறது. அவரது தன்னலமற்ற பணிக்கு அவரது மனைவி வழக்கறிஞர் சித்ரா மகள் கீர்த்தனா உள்ளிட்டோம் உறுதுணையாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0