திருச்சி பெரிய மிளகுபாறை புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் உண்டியல்கள் உடைப்பு ரூ.1.50 லட்சம் கொள்ளை

Aug 16, 2026 - 21:23
Aug 16, 2026 - 21:27
திருச்சி பெரிய மிளகுபாறை புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் உண்டியல்கள் உடைப்பு  ரூ.1.50 லட்சம் கொள்ளை

திருச்சி பெரிய மிளகுபாறை புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் உண்டியல்கள் உடைப்பு ரூ.1.50 லட்சம் கொள்ளை

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பெரிய மிளகுபாறை பகுதியில், அரசு மருத்துவக் கல்லூரி அருகில் அமைந்துள்ள புனித சந்தியாகப்பர் திருத்தலத்தில் நேற்று (ஆக.15) நள்ளிரவு மர்ம நபர்கள் புகுந்து, ஆலயத்தில் இருந்த அனைத்து உண்டியல்களையும் உடைத்து சுமார் ரூ.1.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். ஆலயத்தின் முன்புறம் அமைந்துள்ள மாதா கேபி , ஆலயத்தின் உட்புறத்திலும் இருந்த உண்டியல்கள் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை ஆலயப் பணியாளர் ஒருவர் உண்டியல்கள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு, பங்குத்தந்தை ஆரோக்கிய அமல்ராஜிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து பங்குத்தந்தை, ஆலய நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து காவல்துறையினருக்கு 100 அவசர தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, ஆலயத்தில் பதிவாகியிருந்த கைரேகைகள் மற்றும் உடைக்கப்பட்ட உண்டியல்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். இந்நிலையில், இந்தப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பொன்மலை, கலெக்டர் அலுவலக சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், தற்போது ஆலயத்திலும் கொள்ளை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர் திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0