அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க 25 ஆண்டுகளாக இலவச நூலகம் நடத்தும் சமூகச் செயற்பாட்டாளர்
அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க 25 ஆண்டுகளாக இலவச நூலகம் நடத்தும் சமூகச் செயற்பாட்டாளர்
"ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது" என்ற உயரிய கருத்தை வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு, கடந்த 25 ஆண்டுகளாக தனது இல்லத்தையே அறிவுக் கோயிலாக மாற்றி சமூக முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருபவர் யோகா ஆசிரியர் பெ. விஜயகுமார். திருச்சிராப்பள்ளி மாநகரின் புத்தூர் பகுதியில் அமைந்துள்ள தனது இல்லத்தின் முன்பகுதியில், எந்தவித கட்டணமும் இல்லாமல் அனைவரும் பயன்படுத்தக்கூடிய இலவச நூலகத்தை நிறுவி தொடர்ந்து நடத்தி வருகிறார். அறிவு என்பது பணம் உள்ளவர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டிய பொதுச் சொத்து என்ற உயரிய எண்ணமே இந்நூலகத்தின் அடித்தளமாகும். இன்று ஆயிரக்கணக்கான நூல்களைக் கொண்ட இந்த நூலகம், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் அறிவுக் களஞ்சியமாக விளங்கி வருகிறது. கல்வி, இலக்கியம், அறிவியல், சட்டம், மருத்துவம், சுற்றுச்சூழல், வரலாறு, தத்துவம், சுயமுன்னேற்றம், யோகம், ஆன்மிகம்,சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த நூல்கள் இடம்பெற்றுள்ளன. நூலகத்தின் தனிச்சிறப்பு என்னவெனில், இங்கு நூலகர் இல்லை, உறுப்பினர் கட்டணம் இல்லை, வாசிப்பதற்கு காலக்கெடு இல்லை. அறிவைத் தேடி வருபவர்களுக்கு எப்போதும் திறந்திருக்கக் கூடிய சமூக நூலகமாக இது திகழ்கிறது. பலர் தங்களிடம் உள்ள நூல்களை இலவசமாக வழங்கியதன் மூலம், இந்நூலகம் மக்கள் பங்களிப்புடன் வளர்ந்த அறிவு இயக்கமாக மாறியுள்ளது. நூலகப் பணியுடன் மட்டுமல்லாமல், தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் 25 ஆண்டுகளாக பழங்கால புழங்கு பொருட்கள் காட்சியகத்தையும் நடத்தி வருகிறார். முன்னோர்களின் வாழ்க்கை முறை, தொழில்நுட்ப அறிவு, கலாச்சாரம் மற்றும் வரலாற்றை எடுத்துரைக்கும் நூற்றுக்கணக்கான பாரம்பரிய பொருட்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இப்பொருட்களின் வரலாறு மற்றும் பயன்பாடுகளை விளக்கி பாரம்பரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவரது சேவை நூலகம் மற்றும் பாரம்பரிய பாதுகாப்போடு மட்டுப்படவில்லை. ஆதரவற்றோர் பசியாற்ற அன்னதானம் வழங்குதல், உரிமை கோரப்படாத மற்றும் ஆதரவற்ற உடல்களுக்கு காவல்துறையினர் முன்னிலையில் உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்தல், இரத்ததானம் வழங்குதல், உடல்தான உறுதிமொழி மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு மனிதநேயப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். . அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் அவரது முயற்சியைப் பாராட்டி பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்கள் விருதுகள் வழங்கியுள்ளன. குறிப்பாக தமிழ்நாடு ஆளுநர் விருது-2025, மனிதநேய மாமணி விருது, சிறந்த மனிதநேய விருது, மாவட்ட ஆட்சித்தலைவர் நற்சான்றிதழ், அறிவுச்சோலை விருது, புத்தகப் பிரியர் விருது உள்ளிட்ட பல்வேறு அங்கீகாரங்களைப் பெற்றுள்ளார். இலவச நூலகம், பாரம்பரிய பாதுகாப்பு, மனிதநேயச் சேவை, கல்வி விழிப்புணர்வு, சமூக மேம்பாடு ஆகிய ஐந்து துறைகளையும் ஒருங்கிணைத்து சமூகத்திற்கு சேவை செய்து வரும் யோகா ஆசிரியர் பெ. விஜயகுமார். "நூல்களைப் பாதுகாப்பது அறிவைப் பாதுகாப்பதாகும்; அறிவைப் பாதுகாப்பது சமூகத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதாகும்" என்ற கொள்கையை வாழ்வில் செயல்படுத்தி வரும் யோகா ஆசிரியர் பெ. விஜயகுமார் சேவை, வருங்கால தலைமுறைகளுக்கும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கின்றது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0