தமிழர் வாழ்வியலை எடுத்துரைக்கும் புழங்கு பொருட்கள் காட்சியகம்
தமிழர் வாழ்வியலை எடுத்துரைக்கும் புழங்கு பொருட்கள் காட்சியகம்
திருச்சி புத்தூர் பகுதியில் தமிழர் வாழ்வியலை எடுத்துரைக்கும் புழங்கு பொருட்கள் காட்சியகத்தை திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தனது இல்லத்திலேயே அமைத்துள்ளார். புழங்கு பொருட்கள் காட்சியகத்தை பெரம்பலூர் மாவட்டம் மறவநத்தம் ஆர்.சி. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பெனடிக்ட் பார்வையிட்டார். புழங்குப் பொருட்கள் காட்சியகம் குறித்து யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில், ஒரு சமூகத்தின் வரலாறு, பண்பாடு, வாழ்க்கை முறை, தொழில்நுட்ப அறிவு மற்றும் மரபு ஆகியவற்றை அறிந்து கொள்ள உதவும் முக்கியமான ஆதாரங்களில் ஒன்று புழங்கு பொருட்களாகும். மனிதர்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திய பொருட்கள் காலப்போக்கில் பயன்பாட்டிலிருந்து மறைந்தாலும், அவை வரலாற்றுச் சான்றுகளாக மாறுகின்றன. இத்தகைய பொருட்களை சேகரித்து பாதுகாத்து மக்களுக்கும் மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தும் இடமே புழங்கு பொருட்கள் காட்சியகம் ஆகும். முன்னோர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திய வீட்டு உபயோகப் பொருட்கள், வேளாண் கருவிகள், சமையல் பாத்திரங்கள், இசைக்கருவிகள், அளவைகள், தொழிற்கருவிகள், நாணயங்கள், விளக்குகள், கல்வி உபகரணங்கள் போன்ற அனைத்தும் புழங்கு பொருட்கள் எனப்படுகின்றன. இவை ஒரு காலகட்ட மக்களின் வாழ்க்கை முறையையும் அறிவியல் திறனையும் வெளிப்படுத்துகின்றன. புழங்கு பொருட்கள் காட்சியகத்தின் நோக்கமானது பழமையான பொருட்களை பாதுகாத்து இளம் தலைமுறையினருக்கு மரபை அறிமுகப்படுத்தி தமிழர் பண்பாடு மற்றும் வாழ்வியலை எடுத்துரைப்பது ஆகும். இவை வெறும் பொருட்களின் சேகரிப்பு அல்ல, தமிழர் வாழ்வியலின் உயிருள்ள ஆவணங்களாக திகழ்கின்றன என்றார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0